
தமிழகத்தில் 27 மாவட்டங்களை தவிர ஈரோடு,திருப்பூர்,கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கரோனா தொற்று 500 ஆக நீடிப்பதால் டாஸ்மாக் கடைகள் செயல்படுவதில்லை. இதனால் கர்நாடகத்தில் இருந்து அதிகளவில் மதுபானங்கள் கடத்தப்படுவதால் தமிழகம் கர்நாடக மாநில எல்லையில் பண்ணாரி, ஆசனூர், திம்பம் ,தாளவாடி பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். சத்தியமங்கலம் காவல் உட்கோட்டத்தில் கடந்த 20 நாள்களில் சுமார் 150 வாகனங்களில் 12 ஆயிரம் கர்நாடக மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே அண்மையில் இரு மாநில எல்லையில் இருந்து கடம்பூர் வனத்தின் வழியாக இரு சக்கர வாகனத்தில் சுமார் 400 கர்நாடக மதுபாட்டிகள் கடத்தியதாக வேட்டைத்தடுப்பு காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். வனத்துறையின் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் வாகன சோதனைக்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் இந்த கடத்தில் எதிரொலியாக வேட்டைத்தடுப்பு காவலர்களையும் போலீசார் ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர். திம்பம் மலைப்பாதையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆசனூர் வேட்டைத்தடுப்பு காவலர்களை தடுத்து நிறுத்திய ஆசனூர் போலீசார், அவர்களை சோதனையிட்டு பைகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து வந்த வனத்துறை வாகனங்களையும் சோதனையிட்டனர்.
