ஜெயமோகன் எழுதிய துணைவன் எனும் சிறுகதையை மையமாக வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். அந்த படத்தில் சூரி தான் ஹீரோ. வெற்றிமாறன், சூரி கூட்டணி சேர்ந்துள்ள படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவர் ஏற்கனவே அனைத்து பாடல்களுக்கும் இசையமைக்கும் பணியை முடித்துவிட்டார்.
வெற்றிமாறன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிப்பதாக இருந்தது. ஆனால் குளிர் அதிகம் உள்ள இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருவதால் பாரதிராஜாவால் கலந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவர் தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறி விலகிவிட்டார்.
பாரதிராஜா விலகிய பிறகு கிஷோரை ஒப்பந்தம் செய்தார் வெற்றிமாறன். ஆனால் அவரும் படத்தில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் பாரதிராஜா நடிப்பதாக இருந்த முதியவர் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
முதியவராக நடிக்க நேற்று முன்தினம் லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அந்த லுக் டெஸ்ட் திருப்திகரமாக இருந்ததாம். இதையடுத்து நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார் விஜய் சேதுபதி.
வெற்றிமாறன், விஜய் சேதுபதி முன்பே கூட்டணி சேர வேண்டியது. வட சென்னை படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் விஜய் சேதுபதி. படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில் அந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகினார். அதன் பிறகு தற்போது தான் அவர்கள் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.
வெற்றிமாறனுடன் விஜய் சேதுபதி சேர்ந்திருப்பது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தான் என்றாலும் வயதான கதாபாத்திரம் என்பதால் கவலையும் அடைந்துள்ளனர். வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், வயதான கதாபாத்திரம் என்று வித்தியாசம் எல்லாம் பார்க்காமல் சந்தோஷமாக நடிப்பவர் விஜய் சேதுபதி. அவருக்கு அது பெரிதாக தெரியவில்லை. ஆனால் அவரின் ரசிகர்கள் தான் பாவம் கவலைப்படுகிறார்கள்.