சென்னை: போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் இன்று காலை அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அண்ணாத்த படப்பிடிப்பு இருந்ததால் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை என்றார். தொடர்ந்து பேசிய அவர், எதிர்காலத்தில் அரசியல் கட்சி தொடங்கலாமா என மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கருத்து கேட்ட பின்பு முடிவை அறிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த தெரிவித்தார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் அரசியலுக்கு வரமாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அறிவிப்பேன் என தெரிவித்திருப்பதாக கூறினார். தற்போது, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அரசியலுக்கு வரும் நோக்கத்தில் ரஜினி ரசிகர் மன்றம் மக்கள் மன்றமாக மாற்றப்பட்டது. காலச்சூழ்நிலைகள் அதற்கு இடம் கொடுக்காததால் அரசியலில் ஈடுபடமுடியவில்லை. எதிர்காலத்திலும் அரசியலில் ஈடுபடு எண்ணம் எதுவும் இல்லை. ஆகவே மக்கள் மன்றம், இனி ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தனது முடிவினை உறுதியாக தெரிவித்துவிட்டார் ரஜினிகாந்த்.