*ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்*
அடால்ப் ஹிட்லர்….. ச்சும்மா…பெயரைக் கேட்டவுடனே அதிருதில்ல… வசனத்திற்கு பொருத்தமானவர். அவரின் பெயரைக் கேட்டு உலக நாடுகள் நடுங்கின. 1918ம் ஆண்டு யுத்தத்தில் ஜெர்மனி தோற்றதற்கு யூதர்கள் தான் காரணம் என்று நினைத்த ஹிட்லர், வரலாற்றில் எழுதியது மிகப்பெரிய ரத்தச் சரித்திரம். தினமும் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேரை இருட்டறையில் தள்ளி விஷப்புகையிட்டுச் சாகடிக்கச் செய்தார். ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை பல லட்சம் லட்சம் எனக்கூறப்படுகிறது.
இத்தனை கொலைகளையும் செய்த ஹிட்லருக்கு தற்கொலை மீது காதல் இருந்திருக்க வேண்டும். ஹிட்லரின் பாசிச நடவடிக்கையைப் பொறுக்க முடியாமல் அவரைக் கொல்ல கர்னல் வான் ஸ்டப்பன்பர்க் தலைமையில் அவரது தளபதிகள் சதி திட்டம் தீட்டினர். இதன் தொடர்ச்சியாக நடந்த குண்டுவெடிப்பில் ஹிட்லர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் என அவர் நினைத்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தூக்கில் ஏற்றினார்.
தண்டனையாய் தற்கொலை
கர்னல் வான் ஸ்டப்பன்பர்க்குக்கும், குண்டு வெடிப்பில் காயமடைந்த மற்றொரு தளபதியான ரோமெலுக்கும் ஹிட்லர் மரண தண்டனை விதித்தார். ரோமெல் ஒரு காலத்தில் ஹிட்லரின் நெருங்கிய சகாவாக இருந்தவர். திடீரென ‘அவரை தூக்கில் போட வேண்டாம்’ என்று ஹிட்லர் கூறினார். இதைக் கேட்ட அனைவரும், அவரை ஹிட்லர் விடுதலை செய்யப்போகிறார் என நினைத்தனர். ‘உங்கள் பழைய சேவைக்காக கருணை காட்டுகிறேன். உங்களைக் கொல்ல விருப்பமில்லை. நீங்களே தற்கொலை செய்து கொள்ளுங்கள்’ என ஹிட்லர் வைத்தார் ஒரு டிவிஸ்ட். தண்டனையாக ஒருவருக்கு தற்கொலையைத் தந்து வரலாற்றில் இடம் பிடித்த ஹிட்லர், கடைசியில் தன் மனைவி ஈவாவுடன் தற்கொலை செய்து கொண்டார் என்றால் நம்ப முடிகிறதா?
ராஜ்யத்தையே கட்டியாண்ட ஒருவரை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு உந்தித்தள்ளியது எது என்றால் தோல்வி தான் என எளிதில் சொல்வீர்கள். ஒருவரின் தற்கொலைக்கு பின்னால் தோல்வி மட்டும் தான் காரணமாக இருக்க முடியுமா? உலகில், ஆண்டிற்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஒவ்வொரு 40 நொடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்கின்றனர். மன அழுத்தம், குடும்ப பிரச்னை, பணநெருக்கடி உள்ளிட்ட உளவியல் காரணமாக இந்தியாவில் ஆண்டு தோறும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.
பாதுகாப்பு வீரர்களும் விதிவிலக்கல்ல
2000ம் ஆண்டில் இந்தியாவில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 593 பேர் தற்கொலை செய்தனர். இந்த எண்ணிக்கை 2005ம் ஆண்டு 1 லட்சத்து 13 ஆயிரத்து 914 ஆகவும், 2015ம் ஆண்டில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 599 ஆகவும் உயர்ந்தது. இதில் அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால், இந்தியாவை பாதுகாக்கும் பாதுகாப்பு படையினர் பெருமளவு தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது தான். 15 லட்சத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படைவீரர்களைக் கொண்ட இந்தியாவில், ஆண்டுக்கு 100க்கும் மேற்பட்ட வீரர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
2018ம் ஆண்டு 104 பாதுகாப்பு படை வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2017ல் 101 பேரும், 2016ல் 129 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் சுபாஷ் ஹம்ரே மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். ஆனால், இதை விட தமிழகத்தில் மிக அதிக எண்ணிக்கையில் காவல்துறையில் தற்கொலை நடப்பது தான் பேரதிர்ச்சியை உருவாக்கி வருகிறது. ஆண்டுக்கு 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தற்கொலை செய்து கொள்வதாக உயர்நீதிமன்றமே கவலை தெரிவித்ததில் இருந்து இவ்விஷயத்தின் வீரியத்தை உணர முடியும். தமிழகத்தில் எந்த அரசுத்துறையிலும் இத்தனை தற்கொலைகள் ஏன் நடப்பதில்லை?
குற்றங்கள் அதிகரிப்பு
தமிழகம் முழுவதும் 1,324 காவல்நிலையங்கள் உள்ளன. இதில் டிஜிபிக்கள் முதல் காவலர் வரை சுமார் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 239 பேர் பணியாற்றுகின்றனர். ஆனால், மக்கள் தொகை எண்ணிக்கை 8.25 கோடி. மக்கள் தொகை எண்ணிக்கைக்கேற்ப காவலர்கள் இல்லாத காரணத்தால், கரும்பு சக்கையாய் காவல்துறையினர் பணியில் பிழிந்தெடுக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் அன்றாடம் கொலை, செயின் பறிப்பு, கொள்ளை, ஆள் கடத்தல், கூலிப்படையால் நடக்கும் கொலைகள், ஏடிஎம் கொள்ளை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடக்கின்றன. கடந்த 2016ம் ஆண்டில், தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக மாநிலம் முழுவதும் 11 ஆயிரத்து 625 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூகத்தில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அரசுடன் சேர்ந்து விமர்சிக்கப்படுவது காவல்துறை தான்.
தேசிய அளவில் நடக்கும் போராட்டங்களில் 2வது இடத்தில் தமிழகம் உள்ளதாக தேசிய காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 35 ஆயிரம் போராட்டங்கள் தமிழகத்தில் நடப்பதாக காவல்துறை கூறுகிறது. இப்போராட்டங்களை ஒடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக காவல்துறையின் வசம் தான் உள்ளது. அதனால் பணி அழுத்தம் கூடும் போது இயல்பாகவே மன அழுத்தம் கூடுகிறது.
ஆண்டுக்கு ஆயிரம் பேர் விலகல்
சமீபத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல்துறையினர் சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் கூறுகையில், ‘‘தமிழகத்தில் போலீசார் கூடுதல் பணிச்சுமையுடன் பணிபுரிகின்றனர். இதனால் அவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். விசேஷம், திருவிழா, பண்டிகை போன்ற நேரங்களில் நாம் வீட்டில் இருக்கும்போது, போலீசார் பணிபுரிகின்றனர்.
அவர்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பதில்லை. ஒரு இடத்தில் கலவரம் ஏற்படும்போது அனைவரும் வீட்டிற்கு பயணிக்கிறோம். ஆனால் போலீசார் வீட்டில் இருந்து கலவர பகுதியில் பாதுகாப்பு பணிக்கு செல்கின்றனர். தமிழகத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப போலீசார் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா? தொடர் பணிச்சுமையால் தமிழகத்தில் ஆண்டுக்கு ஆயிரம் பேர் போலீஸ் பணியில் இருந்து விலகுகிறார்கள். 200 போலீசார் தற்கொலை செய்கிறார்கள்…’’ என்று அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்தனர்.
செக்ஸ் டார்ச்சர்
காவல்துறையில் நடக்கும் மனித உரிமை மீறல் குறித்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், காவலர்களுக்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள் பெரும்பாலும் வெளிச்சத்திற்கு வருவதில்லை. கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணிபுரிந்து வந்த காயத்ரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவதற்க முன் எழுதிய கடிதத்தில், 2 போலீஸ் ஏட்டுக்கள் செக்ஸ் தொல்லை கொடுத்ததாலேயே தற்கொலை செய்து கொண்டதாக புகார் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீது, அதே பிரிவில் பணியாற்றும் பெண் எஸ்பி பாலியல் புகார் அளித்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் தற்போது நடந்து வருகிறது.
ஊதிய முரண்பாடு
விடுப்பு மறுப்பு, ஒடுக்குமுறை இதையெல்லாம் தாண்டி காவல்துறையினருக்கு பெரும் பிரச்னையாக இருப்பது ஊதிய கோரிக்கை தான். பெரும்பாலான காவல்துறையினர் இதன் காரணமாகவே, `கைநீட்டுகின்றனர்’ என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அரசுத்துறையில் இயந்திரம் போல ஓய்வின்றி பணியாற்றும் தங்களை அரசு மாற்றான் தாய் மனப்பான்மையோடு பார்ப்பதாக காவலர்கள் கொந்தளிக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பலர் படபடத்தனர்.
‘‘காவலர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் அநீதி என்பது அதிகாரிகள் கொடுக்கும் தண்டனைகள் தான். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முன்பு தீர்ப்பாயம் இருந்தது. ஆனால் தற்போது உயர்நீதிமன்றம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. காவல் துறையில் இரண்டாம் நிலைகாவலராக பணியில் சேருபவருக்கு அடிப்படை ஊதியம் ரூ.18,200. கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி. அடுத்த பதவி உயர்வு என்பது 10 ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் முதல் நிலைக் காவலர்.
இதே துறையில் அமைச்சு பணியாளராக இதே தகுதி தான். ஆனால் அவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 19,200. அதேபோல இளநிலை உதவியாளர் 5 ஆண்டுகளில் உதவியாளராக பதவி உயர்வு பெறுகின்றனர். இப்பதவி தலைமை காவலர் பதவிக்கு இணையானது. இப்பதவியை அடைய நாங்கள் 15 ஆண்டுகள் தண்டனை இல்லாமல் பணியாற்ற வேண்டும். ஆனால், எங்கள் துறையில் அமைச்சு பணியாளர்கள் 5 முதல் 7 ஆண்டுகளில் இந்த நிலையை அடைகிறார்கள்.
சங்கம் இல்லை..
அத்துடன் ஐந்தாவது ஊதியக்குழுவிற்கு முன்பு தலைமை காவலரும், அமைச்சு பணியாளரில் கண்காணிப்பாளரும் ஒரே ஊதியம் தான் பெற்று வந்தனர். தற்போது உதவி ஆய்வாளருக்கு இணையான ஊதியத்தை அமைச்சுப்பணியாளர்கள் பெறுகிறார்கள். ஆனால், நாங்கள் உதவி ஆய்வாளராக குறைந்தது 30 ஆண்டுகள் பணிபுரிய வேண்டியுள்ளது. தற்போது 1986ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்த காவலர்கள் மட்டும் தான், உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
2004ம் ஆண்டு நேரடியாக உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த எங்களது சகோதரிகள் இன்னும் பதினான்கரை ஆண்டுகளாகியும் ஒரே பதவியைத் தான் வகிக்கின்றனர். ஆனால் அமைச்சு பணியாளரில் நேரடியாக உதவியாளராக 2006ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்கள் பிஏ வாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதே போல வருவாய்த்துறையில் 2011ம் ஆண்டு நேரடியாக உதவியாளராக பணியில் சேர்ந்தவரகள் டிடியாகவும், தாசில்தாராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் உரிமை பெற சங்கம் உள்ளது. ஆனால், காவலர்களாகிய எங்களுக்கு இல்லை.
டென்ஷனைக் குறைங்க…
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் டாக்டர் பெரியார் லெனின் கூறுகையில், “தற்கொலை உணர்வு ஏற்பட 3 வகையான அடிப்படை விஷயம் உள்ளது. முதல் வகை மரபியல் ரீதியிலானது. ஏற்கனவே குடும்பத்தில் யாராவது தற்கொலை செய்திருந்தால் அந்த குடும்ப வாரிசுகளுக்கு உணர்வுகள் மேலோங்கி இருக்கும். இரண்டாம் வகை சம்பந்தப்பட்ட நபரின் மனோபாவம் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய வகையில் இருந்தால் அவர்களுக்கு தற்கொலை எண்ணம் இருக்கும். இவர்களுக்கு தோல்வியான விஷயம் நடக்கும் போது அதற்கு தற்கொலை தான் தீர்வு என எண்ணி அதற்கு முயற்சி செய்வார்கள். மூன்றாம் வகை சூழ்நிலை, திடீர் அவமானம், நஷ்டம், சமாளிக்க முடியாத பிரச்னை, இழப்பு ஏற்படும் போது தற்கொலை செய்யச் சொல்லி மனம் தூண்டப்படும். அதேபோல மதுபோதையால் தற்கொலை எண்ணங்கள் அதிகரித்து வருகிறது. மூளையில் செரக்டோனின் என்ற ரசாயனம் குறைவாக சுரக்கும் போது சிலர் அதிகமாக உணர்ச்சி வசப்படுவார்கள்.
தற்கொலையைத் தடுக்க முதலில் அதிகமாக உணர்ச்சி வசப்படுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கு தற்கொலை தான் தீர்வு என செல்லும் போது அதனை மறு ஆய்வு செய்ய வேண்டும். மனநல மருத்துவரையோ, மனநல ஆலோசகரையோ சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். உடல் நலம் நன்றாக இருந்தால் தான் மனநலம் நன்றாக இருக்கும். உணவு பழக்க வழக்கமும் நன்றாக இருக்க வேண்டும். தேவையற்ற பழக்க வழக்கங்களை கைவிட வேண்டும். எந்த ஒரு விஷயத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு இருக்க கூடாது. உடனடியாக ஒரு விஷயத்திற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என நினைக்கக் கூடாது. அதிக அளவில் உணர்ச்சிவசப்படுவதால் தற்கொலைகள் அதிகமாக நடக்கிறது,’’ என்கிறார்.
உயிரிழந்தவர்களின் பட்டியல்…
திருச்சி ஆயுதப்படை ஆனந்தராஜ், சென்னை பரங்கிமலை கோபிநாத், சஸ்பெண்ட் செய்யப்பட்ட மன உளைச்சலில் ஆயுதப்படை காவலர் சின்னச்சாமி, ஜெயலலிதா நினைவிடத்தில் காவலர் அருண்ராஜ், திருவள்ளூர் பள்ளிபட்டு காவலர் மணிகண்டன், சென்னை பரங்கிமலை ஆயுதப்படை கோபிநாத், சென்னை கமாண்டோ போலீஸ் பயிற்சிப் பள்ளியில் பணிபுரிந்த கார்த்திக் வேலு, மதுரை நாகையாபுரம் காவலர் கருப்பாயி, மதுரை அண்ணா நகர் வங்கியில் பணியில் இருந்த போலீஸ்காரர் மீனாட்சி, சென்னை அயனாவரம் எஸ்ஐ சதீஷ் குமார், சென்னை ரிசர்வ் வங்கியில் பணியில் இருந்த காவலர் மகேந்திரபெருமாள் உள்ளிட்ட பலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சேலம் டிஎஸ்பி விஷ்ணுப்ரியா, புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை சர்மிளாதேவி, சேலம் ஜலகண்டபுரம் புவனேஸ்வரி, தேவகோட்டை நெட்டேந்தல் காவலர் சாவித்திரி, திருச்சி மகளிர் சிறையில் காவலர் செந்தமிழ் செல்வி, சென்னை அடையாறு காவலர் லட்சுமி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவலர் சங்கீதா, கடலூரில் ஆயுதப்படை பிரவீனா, அம்பாசமுத்திரம் காவலர் ராமு, தாராபுரம் காயத்ரி என தற்கொலை செய்து கொண்ட பெண் காவலர்களின் பட்டியல் நீளமானது.
விடுமுறையே இல்லை
ஊக்கத்தொகை இல்லை. ஓய்வூதியம் இல்லை. உணவுக்கான பீடிங் தொகைகூட பெரிய அளவிலான பந்தோபஸ்து பார்க்கும் போது கிடைப்பதில்லை. அத்துடன் அனைவரின் முன்பு உயர் அதிகாரிகள் மரியாதை இல்லாமல் நடந்து கொள்வது மிகப்பெரிய மனஉளைச்சலாக உள்ளது. அரசுத்துறையில் அனைவருக்கும் வார விடுமுறை உள்ளது. ஆனால், காவல்துறையில் அது இல்லை. பிறகெப்படி குடும்பத்தில் நடக்கும் நல்லது, கெட்டதில் கலந்து கொள்ள முடியும்? ஆண்டுக்கு 12 நாட்கள் மட்டும் தான் விடுப்பு. அதையும் மேலதிகாரிகள் தருவதில்லை. இதனால் ஏற்படும் பிரச்னையால் தான் காவலர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள எங்கள் துறையில் நிலவும் பிரச்னையை வெளியே சொல்ல முடியாமலே புழுங்கிச் சாகிறோம். குற்றவாளியை நோக்கி நீட்ட வேண்டிய துப்பாக்கியை, தங்களுக்குத்தானே பயன்படுத்தி பலர் செத்துப் போகிறார்கள். இந்த பிரச்னைக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…’’ என்று வலியுறுத்துகின்றனர்.
இந்தியாவில் மக்கள் சராசரியாக 68 வயது வரை வாழ்வதாக உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. ஆனால் மன அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்னை காரணமாக தமிழகத்தில் காவலர்கள் ஏராளமானோர் 40 வயதிற்குள் தற்கொலை செய்து கொள்வது தான் சோகத்திலும் சோகம்.
