ஓசூர்: தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரியில் நீர் திறந்து விட்ட விவகாரம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள், இன்று 19வது நாளாக தினசரி 4 கி.மீ., தூரம் நடந்து பெங்களூருக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஓசூர் பஸ் ஸ்டாண் ட்டில் ஜூஜூவாடி வரை செல்லும் டவுன் பஸ்களில் ஏறுவதற்கு மக்கள் முண்டியடிக்கின்றனர்.

தமிழகத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக விவசாயிகளும், கன்னட அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல், பந்த், வன்முறை போன்ற பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், தமிழக, கர்நாடக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்துள்ளது. இரு மாநிலத்துக்கும் இடையே கடந்த 5ம் தேதி இரவில் நிறுத்தப்பட்ட பஸ், சரக்கு லாரிகள் போக்குவரத்து இன்று 19வது நாளாக நீடிக்கிறது. இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்குள் செல்லும் பஸ்கள், மாநில எல்லையான ஓசூர், மேட்டூர், சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலேயே திரும்பி விடுகின்றன. இதனால் 4, 5 கி.மீ., தூரம் நடந்து சென்று கர்நாடகாவுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஓசூர் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து ஜூஜூவாடி வரையில் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில் ஏறிச்செல்லும் பயணிகள், அங்கிருந்து 4 கி.மீ., தூரம் நடந்து அத்திப்பள்ளியை அடைகின்றனர். பின்னர் கர்நாடக பஸ்கள் மூலம் பெங்களூரு செல்கின்றனர். தினசரி பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கியும், நடந்தே செல்வதாலும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்