சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குடல், கணையம், கல்லீரல் சார்ந்த அறுவை சிகிச்சை, புற்று நோய் சிகிச்சை பிரிவில் அதிநவீன குடல் உள்நோக்கு கருவி நோயாளிகள் பயன்பாடுக்கு நேற்று அர்ப்பணிக்கப்பட்டது.
உலகத்தரம் வாய்ந்த கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், இனி, குடல் புற்றுநோயை, ஆரம்ப கட்டத்தில் கண்டு பிடித்து விடலாம். அதற்கான அதிநவீன தொழில் நுட்பம் இக்கருவியில் உள்ளது. பித்தப்பை கற்கள், கணைய கற்கள் அகற்றும் அதிநவீன கருவிகளும் இயக்கிவைக்கப்பட்டுள்ளன. அதில், நோய் பாதிப்பை துல்லியமாக கண்டறியலாம். தனியார் மருத்துவமனைகளில் கூட இல்லாத, ‘எண்டோ அல்ட்ரா சவுண்ட்’ கருவியும் நிறுவப்பட்டுள்ளது. கல்லீரல் நோய்களுக்கான அறுவை சிகிச்சை முறைக்கு பயன்படும் மிக நவீன கருவியான, ‘கூசா’ பயன்பாடுக்கு வந்துவிட்டது. இத்தகைய தொழில்நுட்ப கருவிகளால், மஞ்சள் காமாலை, பசியின்மை, உடல் எடை குறைதல், மலத்தில் ரத்தக்கசிவு அறிகுறி பாதிப்புகளையும் கண்டறிந்து விடலாம். மொத்த கருவிகளின் மதிப்பு, 6 கோடி ரூபாய். நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்பட, 8 மாவட்டங்களை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம். முதல்வர் காப்பீடு திட்டம் மூலம் பயன்பெறலாம். என கருவிகளை இயக்கி வைத்த பின் டீன் வள்ளி கூறினார்.
