சீர்மிகு நகர திட்டத்தில், சேலம் மாநகராட்சி பகுதிகளில், 965 கோடியே, 87 லட்சம் ரூபாய் மதிப்பில், 81 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், 234 கோடியே, 89 லட்சம் ரூபாய் மதிப்பில், 40 பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மீதி பணி நடந்து வருகிறது. மழை காலத்துக்கு முன், அப்பணியை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எருமாபாளையம் குப்பை கிடங்கை, பசுமை பூங்காவாக மேம்படுத்தல்; கோட்டை சின்னசாமி தெருவில் வாகன நிறுத்துமிடம், உள்விளையாட்டு அரங்கம் அமைத்தல்; சேதமடைந்த சிறுபாலங்களை மறுசீரமைத்தல்; வ.உ.சி., மார்க்கெட் மேம்பாடு ஆகிய பணியை கண்காணிக்க மாநகர நல அலுவலர் பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், சேதமடைந்த சாலைகளை சீர்மிகு சாலைகளாக மேம்படுத்தும் பணிக்கு செயற்பொறியாளர் லலிதா நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற பணிகளுக்கு, செயற்பொறியாளர் பழனிசாமி, அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் சரவணன், அம்மாபேட்டை உதவி கமிஷனர் சண்முக வடிவேல், கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் ரமேஷ் பாபு, சூரமங்கலம் உதவி கமிஷனர் ராம்மோகன் ஆகியோரும், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருங்கிணைக்கும் பணிகளை, மாநகர பொறியாளர் அசோகன் மேற்கொள்ளவும், தினமும் பணி முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.
