சேலத்தில் ஆடு, கோழி, மனித எழும்புகளை கடித்து மயான கொள்ளை
06.03.2019 சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. அம்மன் வேடம் அணிந்தவர்கள் ஆடு, கோழியை வாயில் கடித்தவாறு ஆக்ரோஷமாக ஆடி வந்தனர். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காளியம்மன், பெரியாண்டிச்சியம்மன் கோயில்களில் இருந்து ஊர்வலமாக மயானங்களுக்கு வரும் பக்தர்கள், அங்கு சிறப்பு பூஜை செய்தனர். அப்போது மருளாடி வரும் நபர், பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கும் ஆடு, கோழிகளை கடித்து ரத்தத்தை குடித்தப்படியே ஊர்வலமாக வந்து மயானத்தில் பூஜை செய்தனர். வேடமிட்டு ஆவேசமாக வருபவர்கள் தரையில் படுத்திருந்த பக்தர்களை தாண்டியும் அவர்கள் மீது ஆக்ரோஷமாக சத்தமிட்டபடி ஏறி மிதித்தும் சென்றனர். இவ்வாறு செய்வதால் அவர்கள் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள், சண்டைகள் மறையும் எனவும், நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமண தோஷம் நீங்கும், பேய், பிசாசு பிடித்தவர்கள் குணம் அடைவார்கள் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். சேலம் மாநகரத்தில் காக்கயன் சுடுகாடு, ஜான்சன் பேட்டை, அன்னதானப் பட்டி, பள்ளப்பட்டி, செவ்வாய்பேட்டை, அம்மாப்பேட்டை, ஜாகீர் அம்மாபாளையம் உள்ளிட்ட இடங்களிலும், மாவட்ட பகுதியில் ஓமலூர், வாழப்பாடி, வீரகனூர், ஆத்தூர் உள்பட பல்வேறு இடங்களிலும் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.
இது போன்ற சேலம் சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமா? பதிவு செய்ய வேண்டுமா? எப்போதும் இனைந்திருங்கள் www.oursalem.com மேலும் நம்ம பேஸ்புக் பேஜ்ஜை லைக் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.









