இயற்கை வளம்

இம்மாவட்டத்தில் பெரும்பகுதி செம்மண், மற்றும் கரிசல்மண் வகையைச் சார்ந்தது. இங்கு காவிரியும், வெள்ளாறும், வசிட்டா நதியும் ஓடுகிறது. இம்மாவட்டம் குறிஞ்சி திணையைச் சார்ந்தது. கல்ராயன், சேர்வராயன், கஞ்சமலை, தீர்த்தலை, ஏற்காடு மலை, நைனாமலை, கபிலமலை முதலியவை முக்கியமானவை.

கனிவளம்

கஞ்சமலை, தீர்த்தலை முதலிய மலையில் இரும்புத் தாது உள்ளது. கஞ்சமலையில் உள்ள இரும்புத்தாது எளிதில் வெட்டியெடுக்கும்படி அமைந்துள்ளது. இம்மலையில் சுமார் 45 கோடி டன் எடையுள்ள இரும்புத் தாது உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து எடுக்கக்கூடிய இரும்புத்தாதுவின் அளவு 304 மில்லியன் டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சேர்வராயன் மலைப் பகுதியில் அலுமினியம் தயாரிப்பதற்கு அவசியமான பாக்சைட் என்ற தாது அதிக அளவில் கிடைக்கின்றது. இம்மாவட்டத்தில் கிடைக்கும் மாக்னசைட் தாது இந்தியாவிலேயே முதல் தரமானதாகக் கருதப்படுகிறது.

மாவட்ட மக்கள்

இம்மாவட்டத்தில் பெருமளவு வன்னியர்களும், வேளாள கவுண்டர்களும் வாழ்கின்றனர். தாரமங்கலம், ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர், சேலம் கிழக்குப் பகுதி ஆகிய இடங்களில் நெசவுத் தொழில் செய்யும் செங்குந்த முதலியார்கள் அதிகளவில் உள்ளனர். எத்தாப்பூர், புத்திரகவுண்டன் பாளையம், பெத்த நாயகன் பாளையம் ஆகிய பகுதிகளில் தெலுங்கு நாயக்கர்களும், சேலத்தின் தென்பகுதி, எளம்பிள்ளை, ஜலகண்டாபுரம் ஆகிய பகுதிகளில் கன்னட சாதியினரும் வாழ்கின்றனர். மாவட்டத்தின் ஆதி குடிகளான மக்கள் சேர்வராயன் மலைத் தொடரில் வாழ்ந்து வருகின்றனர்.

வேளாண்மை

ஆண்டு முழுவதும் இங்கு வேளாண்மை செய்யப்பட்டு வருகிறது. நெல், கரும்பு, வாழை, பருத்தி, சோளம், மாம்பழமும் இதைத் தவிர காப்பி, பாக்கு, நிலக்கடலை, வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு, பழவகைகள் ஆகியவை பணப்பயிராகவும் விளைவிக்கப்படுகின்றன.

வசிட்டா நதியின் குறுக்கே 16 அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து வெட்டப்பட்டுள்ள கால்வாய்களின் மூலம் சுமார் 6000 ஏக்கர் நிலங்கள் நீர்பாசனம் வசதி பெறுகின்றன. மேட்டூர் அணை கால்வாய் மூலம் ஓமலூர், சங்ககிரி வட்டங்கள் பயனடைகின்றன. சேலம் பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்து யூனியன் ஏரிகள் மொத்தம் 258 உள்ளன. இவ்வேரிகளால் மொத்தம் 23500 ஏக்கர் நிலங்கள் நீர்பாசன வசதி பெறுகின்றன. இவ்விவசாயப் பிரிவில் சுமார் 45095 கிணறுகள் உள்ளன. இக் கிணறுகளால் சுமார் 11.2 இலட்சம் ஏக்கர் நிலங்கள் நீர்பாசன வசதிகள் பெறுகின்றன. இப்பிரிவில் 22,500 கிணறுகளில், மின்சாரப் பம்பு செட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

நெசவுத்தொழில்

சேலம் மாவட்டத்தில் இரண்டாவது பெருந்தொழிலாக நெசவுத்தொழில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே அதிகமான கைத்தறிகள் உள்ள மாவட்டம் சேலம் மாவட்டமாகும். சேலம் நகரிலும், புதுப்பாளையம், வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய ஊர்களிலும் பருத்தி ஆடைகள் மிகுதியாக நெய்யப்படுகின்றன. சேலம், வெண்ணந்தூர் ஆகிய இடங்களிலும், ஜலகண்டபுரத்தில் இப்போது பவர்லும் தறிகள் மிகுதியாக உள்ளன. சேலம் நகரத்தில் அம்மாப்பேட்டைப் பருத்தி ஆடை நெய்வதில் சிறந்து விளங்குகின்றன. அம்மாப்பேட்டை கூட்டுறவு சங்கம் புகழ்பெற்றது. சேலம் நகரிலும், சேலம் நகரத்தைச் சார்ந்த கொண்டலாம்பட்டிப் பகுதியிலும் பட்டாடைகள் நெய்யப்படுகின்றன.

கால்நடை வளர்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள கால்நடைகளில் 7 சதவீதம் கால்நடைகள் சேலம் மாவட்டத்தில் வளர்க்கப்படுகின்றன. ஓமலூர் வட்டத்திலுள்ள மேச்சேரியில் நல்ல தரமான ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இவ்வாடுகளின் மாமிசமும், தோலும் தரத்தில் உயர்ந்ததவை. இவ்வாடுகளின் தரத்தை உயர்த்த கோயமுத்தூரிலுள்ள தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம், அரசாங்க நிதி உதவியோடு செயல்படுகிறது. சேலம் மாவட்டத்தில் காங்கேயம் மாடுகள், நெல்லூர் பசுக்கள், ஓசூர் பசுக்கள், சிந்திப் பசுக்கள் ஆகியவை அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. மேச்சேரியில் வாரந்தோறும் மாட்டுச் சந்தை கூடுகின்றது.

‘தமிழ்நாடு பால்பண்ணைத் தொழில் வளர்ச்சிக் கழகம்’ சேலத்தில் பெரிய அளவில் பாலைப் பாதுகாக்க குளிர்ப்பதன வசதி செய்து பல்வேறு இடங்களுக்கும் அனுப்புகிறது.

சேலம் மாவட்ட தொழில் வளம்

சேலம் மாவட்டத்து மோகனுரில் சர்க்கரைத் தொழிற்சாலை நடைபெற்று வருகிறது. பள்ளிப் பாளையத்தில் பெரிய காகிதத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. சேலம் (உடையாபட்டி), சேலம், ஆத்தூர், (செல்லியம் பாளையம்), குமாரபாளையம், மேட்டூர் ஆகிய இடங்களில் பெரிய நூற்பு ஆலைகள் நடைபெற்று வருகின்றன.

சேலம் மாவட்டத்து சங்ககிரி துர்க்கத்தில் இந்தியா சிமெண்ட் தொழிற்சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேட்டூரில் இரசாயனப் பொருள் தொழிற்சாலை, அலுமினியத் தொழிற்சாலை, மூலாம் பூசும் தொழிற்சாலை, சந்தன எண்ணெய்த் தொழிற்சாலை, வனஸ்பதி தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலேயே அதிகமான ஜவ்வரிசி இம்மாவட்த்தில்தான் உற்பத்தியாகின்றது.