சேலம்
சேலம் என்ற பெயரில் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும்கூட நகரங்கள் உண்டு. கைத்தறி, வணிக நிலையங்கள் நிறைந்தது இவ்வூர். சேலம் நகரத்தில் வாணிக வளத்தைப் பெருக்கும் இடம் ‘லீபஜார்’ என்னும் கடைவீதியிலுள்ள மொத்த வியாபார நிலையங்களாகிய பல்வேறு மண்டிகள், இந்நகரத்தில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறுகின்ற வாரச் சந்தை வியாபாரம் மிகவும் பெரியதாகும். இந்த வாரச் சந்தைக்கு இம்மாவட்த்திலிருந்தும் அடுத்த மாவட்டங்களிலிருந்தும் பொருட்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் ஏராளமான மக்கள் வந்து கூடுவார்கள். இந்தியாவிலேயே மிகவும் நீளமான – பெரிய இரயில்வே பிளாட்பாரம் சேலம் சந்திப்பு நிலையப் பிளாட்பாரமே ஆகும்.
சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் ஓமலூர் சாலையில் அமைந்துள்ளது. சேலத்தைச் சுற்றி பார்க்கத்தக்க இடங்கள் : இராமகிருஷ்ணமடம், 5 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்ரீகுமரகிரி கோயில், 10 கி.மீ. தொலைவிலுள்ள கந்தராஸ்ரமம், திப்புசுல்தான் கட்டிய ஜாமா மஜ்ஜிட், சேலம் ஸ்டீல் பிளாண்டை அனுமதியுடன் பார்க்கலாம். 10 கி.மீ. தொலைவிலுள்ள குரும்பபட்டி உயிரியல் பூங்கா – இது சேர்வராயன் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
தலைமையகம்: சேலம்
மாநிலம்: தமிழ்நாடு
மொத்தம்: 5245 சதுர கி.மீ.
கிராமப்புறம்: 4561.41 சதுர கி.மீ.
நகர்ப்புறம்: 675.69 சதுர கி.மீ.
மக்கள் தொகை:
மொத்தம்: 3482056
ஆண்: 1781571
பெண்: 1700485
சுகவனேசுவரர் கோயில்
கல்வெட்டுக்களில் கிளிவண்ணமுடைய நாயனார், கிளிவனக் கோயில் பெருமான் அடிகள், கிளி வண்ணத் தேவர் என்னும் திருப்பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. இலக்கியச் சான்றுகளைக் கொண்டு பார்க்கும்போது கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தது எனலாம். இத்திருக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், அந்தராளம், நிருத்த மண்டபம் என ஐந்து அமைப்புகளைக் கொண்டு விளங்குகின்றது. இக்கோயிலின் தென்பால் அறுபத்து மூவர் வீற்றிருக்கின்றனர். இக்கோயிலின் தென்மேற்குப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு வலம்புரி விநாயகர் தனித் திருச்சந்நிதி கொண்டு விளங்குகின்றார். வடமேற்குப் பிராகாரத்தில் முருகப்பெருமான் தனி திருச்சந்நிதியில் எழுந்தருளி காட்சி தருகிறார். திருக்கோயிலின் மேற்கு மதிற் சுவரையொட்டித் தென்பால் பஞ்சமுக லிங்கங்களையும், வடபால் சரசுவதி, கஜலட்சுமி ஆகியோரையும் கண்டு வழிபடலாம். இக்கோயிலின் கருவறையின் மேற்குக் கோட்டத்தில் அண்ணாமலையாரையும், வடக்குத் தேவகோட்டத்தில் காளியும், தெற்குக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும், வடபால் கோமுகத்தை ஒட்டி சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளன. பிற கோயில்களில் சேலம் கோட்டை மாரியம்மனும், தேரடி இராஜகணபதியும் சிறந்த வரப்பிரசாதிகள்.
மேட்டூர்
சேலத்திலிருந்து 52 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வணையைக் கட்டியவர் ஜார்ஜ் என்னும் ஆங்கிலேயர். மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளுள் ஒன்றாகும். இரண்டு மலைகளுக்கு இடையே காவிரியாற்றை தடுத்து – குறுக்கே கட்டப்பட்ட அணையே மேட்டூர் அணையாகும். இந்த அணையின் மூலம் தஞ்சை, திருச்சி, சேலம், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 2,71,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெருகிறது. மேட்டூர் அணையிலிருந்து ஓடிவரும் நீரைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு சுரங்க மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அணையை ஒட்டி பூங்கா அமைந்துள்ளது. இந்நகரையொட்டி தொழிற்பேட்டைகள் அமைந்துள்ளன. இரசாயனப் பொருள் உற்பத்தி சாலையும், அலுமினியத் தொழிற்சாலையும் உள்ளன.
ஏற்காடு
‘ஏழைகளின் ஊட்டி’ என்று ஏற்காடு அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இங்கு குளிர்ச்சியாக இருக்கும். இந்தியாவின் குறிப்பிடத்தக்க மலைவாழிடத்தில் இவ்வூரும் ஒன்று. சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ளது. 383 சதுர கி.மீ. இவ்வூர் அமைந்துள்ளது. நில மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகையின்படி 36,863 பேர் இங்கு வாழ்கின்றனர். ஏற்காட்டின் தட்பவெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கு உயராமலும் 13 டிகிரி செல்சியசுக்கு குறையாமலும் இருப்பது இதன் சிறப்பு. சேலத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் வந்தடையக் கூடிய தொலைவுதான் உள்ளது. ஏற்காட்டில் முதலில் நம்மை கவரும் இடம் ‘ஏரி’தான். அமைதியான, குளிர்ச்சியான, மரங்களடர்ந்த சூழலில் படகுச் சவாரி செய்வது மனதுக்கு இன்பமளிக்கும். இதையடுத்து அண்ணா பூங்கா வண்ணமயமாக அமைந்துள்ளது. ‘லேடிசீட்’ பகுதியிலிருந்து தொலைநோக்கியின் மூலம் அற்புதமான காட்சிகளைக் கண்டு களிக்கலாம். இரவில் சேலத்தின் ஒளிவண்ணமான காட்சியை காணலாம். ‘பகோடா’ முனை என்ற முகட்டிலிருந்தும் மலையின் இயற்கையழகைக் கண்டுகளிக்கலாம். ‘கிள்ளியூர் அருவி’ 3000 அடியிலிருந்து விழும் அழகைக் காணலாம். கோட்டை போன்ற பண்ணை வீட்டை சேலம் மாவட்ட ஆட்சியராக எம்.டி.காக்பர்ன் இருந்தபோது கட்டினார். இவருடைய ஆட்சி காலமான கி.பி. 1820-1829இல் அரேபியா, தென்னாப்பிரிகா முதலிய இடங்களிலிருந்து காபி, பூ, பழம் வகைகளைக் கொண்டு வந்து பயிரிட்டார். சேர்வராயன் கோயில் போகும் வழியில் உள்ள நார்டன் பங்களா அருகில் ‘கரடிக்குகை’ இருக்கிறது. இதுவும் காண வேண்டிய இடமாகும். சேர்வராயன் கோயில் திருவிழாவை ஒவ்வோராண்டும் ‘மே’ மாதம், இங்குள்ள பழங்குடிகள் கொண்டாடுகின்றனர். கோடைவிழா சித்திரை மாதத்தில் இங்கு ஒவ்வோராண்டும் நடைபெறுகிறது. கோடை விழாவில் மலர்க்காட்சி முக்கியமானது.
தாரமங்கலம்
சேலத்திலிருந்து 24 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்குள்ள ‘கைலாசநாதர் கோயில்’ கெட்டி முதலியார்கள் என்று கூறப்படும் சிற்றரசரால் கட்டப்பட்டது. ஊரின் நடுவே கோயில் மேற்கு நோக்கி, ஐந்து நிலைகள் கொண்ட இராசகோபுரத்தின் ஏழு கலசங்களும், சுமார் 375 சுதைச் சிற்பங்களும் அமைந்து விளங்குகின்றன. திருக்கோயிலினுள்ளே முன் மண்டபத்து எட்டுத் தூண்கள் சிற்பக்கலை வடிவங்களாகவே திகழ்கின்றன. முதல் தூணும், கடைசித் தூணும் தளர்ந்து வளைந்துள்ளவை போன்று அமைக்கப்பெற்றுள்ளன.
தூண்களில் யாழி மீதும், இரு குதிரைகள் மீதும் வீரர்கள் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளன. யாழியின் வாயில் கல் உருண்டை உள்ளது. ஆனால் அதனுள் கை நுழையாது; விரல்கள் செல்லும் இடைவெளி உண்டு. அதன் மூலம் சிற்பி கல்லுருண்டையைக் கடைந்திருக்கிறான்.
கல்சங்கிலிகள்
மகா மண்டபத்தின் மேல் தளத்திலும், தூண்களின் போதிகைகளினின்றும் சிறிதும் பெரிதுமான நீண்ட கல்லாலாகிய வளையங்கள் மேல்தளக் கல்லினின்றும் வெட்டப்பட்டுத் தொங்குகின்றன.
மண்டப சுவர்களில் மீன், ஆமை, முதலையின் வடிவங்கள் கல்லோவியங்கள் போல வடிக்கப்பட்டுள்ளன. இதுபோலவே சூழலும் கல் தாமரை மலர், ரதி-மன்மதன் போன்ற சிற்பங்களை வேறெங்கும் காண முடியாது. இங்குள்ள இரண்டு தூண்களில் வாலி வதத்தை உருவாக்கி இருக்கிறான் சிற்பி. இராமன் ஒரு தூண் பக்கத்திலிருந்து வாலியை நோக்கி அம்பு விடுகிறான். வாலி ஒளிகிறான். ஆனால் வாலி நிற்கும் இடமிருந்து இராமனை நோக்கினால் அவன் தெரிவதில்லை.
பேளூர்
சேலத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. வசிஷ்ட்டா நதிக்கரையில் அமைந்துள்ளது. சிதிலமடைந்த இந்த சிவன் கோயிலுக்குப் பெயர் தான்தோன்றிநாதர் கோயில். இக் கோயிலிலுள்ள நிருத்த மண்டபம் உன்னதச் சிற்பக்கலையரங்கமாகத் திகழ்கின்றது. இம்மண்டபத்திலுள்ள தூண்கள் ஒவ்வொன்றும், தாரமங்கலத் தூண் சிற்பங்களை ஒத்துக் காணப்படுகின்றன. இங்கும் யாழியின் வாயில் கற்குண்டு உண்டு.
இக்கோயிலின் வடபால் சிங்கத்தின் வாயில் புகுந்து கிணற்றுக்குச் செல்லும் அமைப்பு வியப்புக்குரியது. தென்பாலுள்ள புனிதமரமான – தலவிருச்சமான பலாமரம் இலுப்பை மரமாகக் காட்சி தருவது வியப்புக்குரியது. இத்திருக்கோயிலிலுள்ள எட்டுத் திருக்கரங்களோடும், ஐம்படை ஆயுதங்களோடும் விளங்குவது கண்டு மகிழத்தக்கது. அவ்வாறே முருகப் பெருமான் அறுமுகங்களோடு விளங்குவது கண்டு மகிழத்தக்கது.
ஆத்தூர்
சேலத்திலிருந்து 51 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கு பெரும் கோட்டை ஒன்று நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. வசிட்டா நதிக்கரையில் அமைந்துள்ளது. அதனால் ஆற்றுர் – தற்போது ஆத்தூராக உள்ளது. இந்நகரம் நெல் வணிகத்தால் சிறப்புபெற்று – ‘ஆத்தூர்க் கிச்சிடி’ புகழ்பெற்றது. இந்நகரத்தில் ஜவ்வரிசி உற்பத்திக் கூடங்கள் பல உள்ளன. கி.பி. 1559-1585 காலத்தில் இருந்த கெட்டி முதலியார் வம்ச சிற்றரசர்களால் இக்கோட்டைக் கட்டப்பட்டது. இக் கோட்டையிலுள்ள பெருமாள் கோயிலும் இவர்களாலே கட்டப்பட்டது. முதலியாரின் சிலை இக்கோயிலில் உள்ளது. இக்கோட்டையில் அகன்ற அகழியும், உயர்ந்த நெடுமதிலும், பீரங்கி அமைக்க மதிற்குமிழிகளும், ஓய்வு மண்டபக் குமிழிகளும், பகைவர் எளிதில் நுழைய முடியாத குறுவாயில்களும் அமைந்துள்ளன. நான்கு நெற்களஞ்சியங்களும், பாழடைந்த மண்டபங்களும், இராணியின் அந்தப்புரமும், இரண்டு நீச்சல் குளங்களும், இடிந்த மதிலும் காணப்படுகின்றன. இக்கோட்டையினுள் உள்ள சிவன் கோயிலுக்கு அருகில் காயநிர்மலேசுவரன் கோயில் இருக்கிறது. அக்கோயில் ஆதித்தசோழன் பாணியில் காணப்படுகிறது.
ஆறகளூர்
சேலத்திலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது. தலைவாசலில் இருந்து தென்கிழக்கில் 4.கி.மீ. தொலைவில் உள்ளது. வசிட்டா நதியின் வலதுபக்கக் கரையில் அமைந்துள்ளது. மாவலிவாண வமிசத்தவரான ‘வாணர்’ என்போர், சோழர்களின் கீழிந்து இப்பகுதியை ஆண்டு வந்தனர். ‘ஆறு அகழிகள்’ இருந்தவூர் என்று சொல்லப்படுகிறது. ஏகாம்பரமுதலியார் 14 ஆம் நூற்றாண்டில் கட்டிய ஸ்ரீகாமேஸ்வரர் கோயில், கரிவரதபெருமாள் கோயிலும் உள்ளன. தியாகனுர் கிராமத்திலும், இவ்வூரிலும் புத்தர் சிலைகள் உள்ளன. காமேஸ்வரர் பேரில் ‘காமநாத கோவை’ என்ற இலக்கியம் இவ்வூருக்கு உண்டு.
சங்ககிரி
சேலத்திலிருந்து 35 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கு 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை சிதிலமடைந்து காணப்படுகிறது. பிற்காலத்தில் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் இக்கோட்டையை பயன்படுத்தினர்.
தம்மம்பட்டி
சேலத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கு சிற்ப வேலைபாடுகள் நிறைந்த கதலி நரசிம்மப்பெருமாள் கோயில் உள்ளது.
பொய்மான் கரடு
சேலத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் சேலம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. சமவெளிப் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி பார்த்தபடி உள்ள மலைத்தொடரில் குகையில் மான் இரு கொம்புகளுடன் இருப்பது போன்ற பொய்த் தோற்றம் காணப்படும். அருகே சென்று பார்த்தால் ஒன்றும் இருக்காது. இது பல ஆண்டுகளாக உள்ள அதிசயம்.
