விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு என்றே போற்றப்படுகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகிலும் பல இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். பலர் நல்ல சம்பளம் கிடைக்கும் வெளிநாட்டு வேலைகளை விட்டு விலகி நாடு திரும்பி விவசாயத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல் பலர் தங்கள் தொழில்நுட்பத் திறனை வேளாண் துறையை மேம்படுவதற்குப் பயன்படுத்தி விவசாயம் சார்ந்த செயல்முறைகளை எளிதாக்கி வருகிறார்கள். இதை மேலும் ஊக்குவிக்க இளம் தலைமுறையினரான பள்ளி மாணவர்களிடையே விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது. பள்ளி என்பது மெத்தப் படித்த மேதாவிகளை மட்டுமே உருவாக்கும் தொழிற்சாலை அல்ல. நல்ல சிந்தனைகளையும் சமூக நலன் சார்ந்த நல்லெண்ணங்களையும் வளர்த்தெடுப்பதே நல்ல பள்ளி. இங்கு மாணவர்களின் ஒட்டுமொத்த திறன் மேம்பட தரமான கல்வி மட்டுமல்லாது பாடதிட்டம் சாராத விளையாட்டு உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தப்படுகிறது. இதுபோன்ற கூடுதல் நடவடிக்கைகளில் விவசாயமும் மெல்ல இணைக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு விவசாய நடவடிக்கைகளை பரிச்சயமாக்கி அவர்கள் மனதில் விவசாயத்தின் முக்கியத்தை ஆழப்பதியவைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார் பஞ்சாபைச் சேர்ந்த விபேஷ் கர்க்.

விபேஷிற்கு தோட்டம் வளர்க்கவேண்டும் என்கிற உந்துதல்  அம்மா 

விபேஷின் அம்மா ஆசிரியர். இவருக்குத் தோட்டம் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். நாம் உண்ணும் உணவை நாமே வளர்த்துப் பயன்படுத்தவேண்டும் என்கிற கோட்பாட்டை முன்னிறுத்தி செயல்படுபவர். காய்கறி மற்றும் மூலிகை தோட்டம் வளர்த்து வந்தார். இவரைக் கண்டுதான் விபேஷிற்கு தோட்டம் வளர்க்கவேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டுள்ளது.

     “என் அம்மாவைப் பார்த்துதான் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் பொழுதுபோக்காக இதில் ஈடுபட்டேன். தோட்டங்களும் செடிகளும் என் வாழ்க்கையில் இவ்வளவு முக்கியத்துவம் பெறும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்கிறார் விபேஷ்.

விவசாயத்தின் மீதான ஆர்வத்தால் இவர் வேளாண் அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு முடித்தார். 2019-ம் ஆண்டு முதல் தனது சொந்த ஊரில் 100 சதுர மீட்டர் பரப்பளவில் சொந்தமாக ஆர்கானிக் விவசாயம் செய்து வருகிறார். ஆர்கானிக் பூக்கள், காய்கறிகள், மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகள் என 100 வகையான செடிகளை இவர் வளர்த்து வருகிறார்.

“என்னுடைய பண்ணை என் ஆய்வகம் போன்றது. இங்கு வெவ்வேறு சோதனைகளை செய்து பார்க்கிறேன்,” என்கிறார்.

     விபேஷ் படிப்பு முடிந்ததும் தோட்டக்கலை மேம்பாட்டு அதிகாரியாக பொறுப்பேற்றார். இந்தியா முழுவதும் 87 கிராமங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது பஞ்சாபின் மன்சா மாவட்டத்தில் 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் இயற்கையோடு ஒன்றிய விவசாய முறைகளை நடைமுறைப்படுத்த விரும்புகிறார். ஜப்பான் நாட்டு தாவரவியலாளர் அகிரா மியாவாகி கண்டுபிடித்த மியாவாகி முறையையும் பின்பற்றுகிறார். இதன்படி இடைவெளியில்லாமல் அதிக எண்ணிக்கையில் அடர்ந்த காடு வளர்க்கலாம்.

மாணவர்கள் ஆர்வத்தை தூண்டுகிறார்

மாநில அரசாங்கத்தின் ‘டான்டிரஸ்ட் பஞ்சாப் மிஷன்’ திட்டத்தின்கீழ் நோடல் அதிகாரியாக பாடதிட்டத்தில் ‘ஸ்கூல் எடிபிள் கார்டன்’ என்கிற திட்டத்தை விபேஷ் அறிமுகப்படுத்தினார்.

இத்திட்டத்தின் மூலம் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அத்துடன் வீட்டிலேயே ஈடுபடக்கூடிய விவசாயம் சார்ந்து நிலையான தீர்வுகளும் வழங்கப்படுகிறது.

மேலும் இத்திட்டத்தின் மூலம் அரசுப்பள்ளிகளில் ஆர்கானிக் தோட்டம் உருவாக்கப்பட்டு அங்கு விளையும் காய்கறிகள் மதிய உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு முழுமையான சத்து நிறைந்த உணவு கிடைக்கிறது. மாணவர்களுக்கு செடி வளர்ப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தி ஊக்குவிப்பதாகவும் விபேஷ் தெரிவிக்கிறார்.


      “மாணவர்களை எங்கள் தோட்டத்திற்கு அழைத்து வந்து கற்றுக் கொடுக்கிறோம். அவர்களுக்கு விதைகளை பரிசளிக்கிறோம். வீட்டுத் தோட்டத்தில் விதைகளை விதைத்து, செடி வளர்த்து புகைப்படம் எடுத்து அனுப்பச் சொல்கிறோம்,” என்றார்.

பயோஎன்சைம் தயாரிப்பு

கின்னோ அல்லது மேண்டரின் ஆரஞ்சு பஞ்சாபில் மிகவும் பிரபலமானவை. ஆனால் இந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பல விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தார்கள். ஏனெனில் விளைச்சலில் பெரும்பகுதி வீணாகிவிடும். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக இவற்றைக் கொண்டு பயோஎன்சைம் தயாரிக்கும் யோசனையை விபேஷ் முன்வைத்தார். இந்த பயோஎன்சைம் இயற்கை உரமாகப் பயன்படும்.

“தற்போது விவசாயிகள் இவற்றை அதிகளவில் தயாரிக்கவும் சந்தைப்படுத்தவும் ஊக்குவிக்கிறோம். இது கூடுதல் வருவாய் ஈட்டவும் உற்பத்தி செலவு குறையவும் உதவுகிறது,” என்றார்.

வருங்காலத் திட்டம்

கிட்டத்தட்ட 25 விவசாயிகள் நிலையான முறையில் தோட்டம் உருவாக்க பயிற்சியளித்து மேலும் பலருக்கு பயிற்சியளித்து வருகிறார். வரும் நாட்களில் பயோஎன்சைம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளார். மெட்ரோ நகரங்களில் சிட்ரஸ் பயோஎன்சைம்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. நகர்புறங்களில் சொந்த தோட்டம் வைக்க ஏராளமானோர் விரும்புகிறார்கள். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தனது முயற்சியை விரிவுபடுத்த விபேஷ் திட்டமிட்டுள்ளார்.