இன்று தேசிய விவசாயிகள் தினம் எல்லோருக்கும் உணவு கிடைக்கவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் உழைக்கும் விவசாயிகளை நினைவுகூர்வது நமது கடமை. நாட்டின் முதுகெலும்பாக திகழ்வது விவசாயம். மற்றவர்களைப்போல ஷிப்ட் முறையெல்லாமல் இல்லை. ஒருநாளில் 24 மணிநேரமும் உழைக்கக் கூடியவர்கள். பசியால் யாரும் வாடக்கூடாது என்று எண்ணி உழைக்கும் விவசாயிகளில் பலரும் இன்று ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு வாழ்கின்றனர் என்பதுதான் கவலையளிக்கும் உண்மை. அப்படியான விவசாயிகளை நினைவுகூறவும், விவசாயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விவசாயிகளுக்கான உரிய அங்கீகாரத்தை வழங்கவும் வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது ‘சர்வதேச விவசாயிகள் தினம்.’ உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட விவசாயத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலங்களில் விவசாயிகள் தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கிசான் திவாஸ் அல்லது தேசிய உழவர் தினம் டிசம்பர் 23 அன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்திய ஐந்தாவது பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளான டிசம்பர் 23ம் தேதியை முன்னிட்டு இந்த நாள் தேர்வு செய்யப்பட்டது. சவுத்ரி சரண் சிங் ஒருமுறை,

      “உண்மையான இந்தியா அதன் கிராமங்களில் வசிக்கிறது,” என்று கூறினார்.

தேசிய விவசாயிகள் தினம் வரலாறு!

சவுத்ரி சரண் சிங் இந்தியாவின் 5வது பிரதமராக ஆட்சி செய்தது குறைந்த ஆண்டுகள் தான். ஜூலை 28, 1979ம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பேற்றவர், 1980 ஜனவரி 14ம் தேதி வரை பிரதமராக இருந்தார். அவர் ஆட்சி செய்த இந்த குறைவான காலக்கட்டத்தில் ஏராளமான விவசாய நலத்திட்டங்களை கொண்டுவந்து அமல்படுத்தினார். விவசாயிகள் குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும், நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும் பல்வேறு புத்தகங்களை சவுத்ரி சரண் சிங் எழுதியுள்ளார். எனவே, சரண் சிங்கின் பிறந்த நாளை கிசான் திவாஸ் அல்லது தேசிய உழவர் தினம் ஆக கொண்டாட அப்போதைய பிரதமர் வாஜ்பாயி 2001ம் ஆண்டு முடிவு செய்து அறிவித்தார்.  இந்தியாவின் இரண்டாவது பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி விவசாயிகளுக்கு வழங்கிய “ஜெய் ஜவன் ஜெய் கிசான்” என்ற புகழ்பெற்ற வாசகத்தை சவுத்ரி சரண் சிங் பின்பற்றினார்.

இந்தியா என்பது அடிப்படையில் கிராமங்களுக்கான தேசமாகத்தான் இருந்திருக்கிறது. அப்பகுதிகளில் வாழும் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை தங்களின் வாழ்வாதாரமாகவும், வருமானத்தின் முக்கிய ஆதரமாகவும் நம்பி வாழ்பவர்கள். நாட்டில் வாழும் மக்களுக்கான உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பலரும் அறியாமல் தான் இருக்கிறார்கள். நாட்டுக்கு முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகள் குறித்தும் விவசாயம் குறித்தும் நகரங்களிலிருக்கும் பலரும் அதை இரண்டாம், மூன்றாம் தர செய்தியாகவே அணுகுகிறார்கள். அது குறித்து அறிந்து கொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதன்காரணமாகத்தான் இது போன்ற கொண்டாட்டங்கள், சர்வதேச தினங்கள், அந்த நாளுக்கான முக்கியவத்தை வலியுறுத்த கடைபிடிக்கப்படுகின்றன.

உழவர் நாளில் விவசாயிகள் மற்றும் சாகுபடி தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, மன்றங்கள், விவாதங்கள், வினாடி வினாக்கள் மற்றும் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் சில…

“ஒரு விவசாயி மீதான அழுக்கு என்பது வீணானதல்ல; அது ஒரு வளம்,” -அலிட் கலந்திரி

“விவசாயி சேற்றில் இருந்து பணம் தயாரிக்கும் மந்திரவாதி” – அலிட் கலந்திரி

“விவசாயம் தவறாக நடந்தால், வேறு எதுவும் நாட்டில் சரியாகச் செல்ல வாய்ப்பில்லை.” -எம். எஸ். சுவாமிநாதன்

     தேசிய விவசாய தினமான இன்று  விவசாயிகளின் தேவையை உணர்ந்து  அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே இந்நாளுக்கான சரியான கருப்பொருளாக இருக்கும்!