சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துறை அலுவலகம் முன்பாக குப்பைத் தொட்டி ஒன்று உள்ளது. இந்த குப்பை தொட்டியில் இன்று மாலை சுகாதார பணியாளர்கள் குப்பைகளை அப்புறப்படுத்தி வந்தனர். அப்போதுதான் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு இருந்த பை ஒன்றில் இறந்த நிலையில் பச்சிளம் குழந்தை இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நிகழ்விடம் விரைந்த காவல்துறையினர் குப்பையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்டு சோதித்து பார்த்ததில் குழந்தை இறந்து இருப்பது தெரியவந்தது . இறந்த நிலையில் மீட்கப்பட்ட குழந்தை குறைபிரசவத்தில் 7 மாதத்தில் பிறந்த கலாம் என தெரியவந்தது மேலும் அந்த குழந்தை பிறந்து சில நிமிடங்களிலேயே குப்பையில் வீசி இருப்பதாக கருதப்படுகிறது. குழந்தையின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குழந்தையை குப்பையில் வீசியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
