சேலம் மாநகர பொது  மக்களின் இதயத்தில் தனி ஒரு இடம் பிடித்த

மாநகர காவல்துறை அதிகாரி


   சிறுவயதிலேயே எப்போதும் சுறுசுறுப்பாகவும், யாராவது தவறு செய்தால் தட்டி கேட்க்கும் மனப்பான்மையும், யாருக்காவது உதவி செய்யும் மனப்பான்மையும், நீ பெரியவன் ஆனால் என்ன வேலை செய்ய போகிறாய் என்றால் போலீஸ் ஆவேன் என்ற சஞ்சய் குமார் இன்று சஞ்சய் குமார் ஐ.பி.எஸ்.,  ஆனதும் தன் பணியில் கடந்து வந்த பாதைகளும், பணியை தாண்டி அவர் செய்த சேவைகளும், சாதனைகளும் மற்றும் தற்போது பணியாற்றும் சேலம் மாநகரில் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை ஒடுக்கவும் மேற்கொள்ளும் பணிகளும், பொது மக்களுடன் சகஜமாக பழகும் பண்பும், தன் சக காவலர்களை வழிநடத்தும் திறமையும் கண்டால் மெய்சிலிர்க்க வைக்கிறது…

    கோரக்கல் சைனிக் ராணுவப் பள்ளியில் மேல்நிலை படிப்பை முடித்த சஞ்சய்குமார் அவர்கள் டெல்லி I.I.T யில் M.Tech பட்டம் படித்திருக்கிறார். இவருடைய மனைவி MD டாக்டராகவும், தம்பி IFS அதிகாரியாகவும், மைத்துனன் IAS அதிகாரியாகவும் உள்ளனா். 1997 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியான இவா் 2000 ஆம் ஆண்டில் சங்கரன் கோவிலில் முதன் முதலாக காவல்துறை உதவி கண்காணிப்பாளராக (A.S.P) பொறுப்பேற்றார். அங்கு பொது மக்களிடம் எளிதாக பழகி தன் பணியினை திறம்பட செய்ததுடன் பல சமூக சீர்திருத்தங்களையும் சிறப்பாக செய்து முடித்தார். தன் முதல் பணியில் சிறப்பாக பணியாற்றியமைக்காக 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படைக்கு பதவி உயா்வு பெற்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்களத்திற்க்கு பணி மாறுதல் செய்ய பட்டார். வீரப்பன் தேடுதல் வேட்டையில் தனக்கு அளித்த பணியில் சிறப்பாக பணியாற்றினார்.

    அதனை தொடர்ந்து, கன்னியாகுமரியில் கடலோர பகுதிகளில் நடை பெற்று கொண்டிருந்த சமூக விரோத செயல்களை தடுக்க கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்க பட்டார். அங்கு பொதுமக்களின் அமைதிக்கும், நாட்டின் நற்பெயருக்கும்  குந்தகம் விழைவித்து கொண்டிருந்த கடல்வழி கடத்தல் களை தடுத்து சிறப்பாக பணியாற்றினார். அப்போது கடற்கரை ஒட்டியுள்ள கிராமங்களில் கடலோர கிராம விழிப்புணர்வு குழுக்கள் மூலம் பல முக்கிய பிரச்சனைகளை தீா்த்தார். பொதுமக்களுடன் இணைந்து ஈவ்டீசிங் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுத்து சிறப்பாக பணியாற்றிய பெருமை அவரையே சாரும்.

   அதனை தொடா்ந்து 2002 ஆம் ஆண்டு டெல்லி திகார் சிறையில் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்க பட்டார். அங்கு பணியாற்றிய 4 ஆண்டுகளில் திகார் சிறையின் பாதுகாப்பு மேம்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு பாதுகாப்பை கடுமையாக பலப்படுத்தினார். அங்கிருந்து பணி மாறுதல் பெற்று மீண்டும் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். கடலூர் மாவட்டம் அப்போது சுனாமியால் பாதிக்கபட்ட நேரத்தில் சுனாமி பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாக சென்று பல்வேறு வளர்ச்சி பணிகளை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். அங்கே சுனாமியால் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிட வந்த அமெரிக்க அதிபர் பில்கிளின்டன், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக கையான்டதற்காக அனைத்து அதிகாரிகளின் பாராட்டுகளையும், நற்பெயரையும் பெற்றார்.

   மீண்டும் மத்திய பணிக்கு சென்ற அவர் தேசிய குற்ற பிரிவு (National Crime Bureau) மண்டல இயக்குனராக பணியமர்த்த பட்டார். அப்போது உத்திரபிரதேசம், பீகார், உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்கள் இவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. கூடுதலாக கல்கத்தா, கவுகாத்தி போன்ற கூடுதல் மாநிலங்களுக்கும் பொறுப்புகள் வழங்கபட்டது. அப்போது மிக பெரிய அளவில் போதை பொருட்கள் கடத்தலை தடுத்து போதை கடத்தல் கும்பலுக்கு  சிம்ம சொப்பனமாக அச்சமின்றி பணியாற்றினார். அயர்லாந்து, பங்களாதேஷ், மியான்மர் போன்ற மற்ற நாடுகளுக்கு சென்று போதை பொருள் கடத்தல் கும்பல் பற்றிய தகவல் பெற்று கடும் நடவடிக்கை எடுத்தார். அச்சமயத்தில் உத்திரபிரதேசத்தில் லக்னோவில் ஹெராயின் கடத்தலை முற்றிலுமாக ஒழித்தார். பல முக்கிய கும்பலை பிடித்து கடும் நடவடிக்கை மேற்கொண்டார். பாப்பி, கொக்கைன், ஹெராயின், கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயிரிடப்படும் உத்திரகாண்ட், அருணாசலபிரதேசத்தில் நேரடியாக களத்தில் இறங்கி பெரியளவில் போதை பொருட்களை அழித்தார்.

   அதனை தொடர்ந்து பதவி உயர்வு பெற்று 2011 ஆம் ஆண்டு சேலம் சரக காவல் துணை இயக்குநராக (DIG) பணியில் அமர்ந்த இரண்டு வருடங்களில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பணியை சிறப்பாக செய்து பொது மக்களின் பாராட்டுகளையும், நன் மதிப்பையும் பெற்றார். அதன்பின் தஞ்சாவூர் சரக DIG யாகவும், கூடுதலாக திருச்சி பொறுப்பையும் ஏற்றார். அப்போது 2014 பாராளுமன்ற தோ்தலை எவ்வித சட்டம் ஓழுங்கு பிரச்சனையும் இன்றி ஜனநாயக முறையில் தோ்தலை நடத்தி பொது மக்களின் பாராட்டையும், நன் மதிப்பையும் பெற்றார்.

    2015 ஆண்டு நவம்பர் மாதம் காவல்துறை இயக்குநராக (IG) பதவி உயர்வு பெற்று மாநில குற்ற ஆவண காப்பக அதிகாரியாக பணியமர்த்த பெற்றார். இவர் பணியில் இருந்த காலத்தில் தமிழகத்தில்  இருக்கும் அனைத்து காவல் நிலையங்களிலும் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை கணினி மையமாக்க பட்டது. பின் அனைத்து காவல் நிலையங்களையும் கணினி மூலம் ஒருங்கினைத்து குற்றங்களை கண்காணிக்கும் முறையை ஏற்படுத்தி அரசு மற்றும் பொது மக்களின் பாராட்டுகளை பெற்றார். குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் கைரேகையை கணினி மூலம் ஒப்பிட்டு பார்க்கும் முறையை காவல் துறையில் அமல்படுத்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

   காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழக அரசால் வழங்கப்படும் ஜனாதிபதி பதக்கம் மாண்புமிகு தமிழக முதலமைச்சா் ஜெ.ஜெயலலிதா அவர்களால் 2016 ஜனவரி 26 ஆம் நாள் வழங்கபட்டது.     தான் பணியாற்றிய அனைத்து இடங்களிலும் சிறப்பாக பணியாற்றிய   சஞ்சய் குமார் ஐ.பி.எஸ். அவர்கள் 2016 ஜீலை 30 ந் தேதி முதல் சேலம் மாநகர ஆணையாளராக பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டு வருகிறார்.

   சேலம் மாநகர ஆணையாளராக பொறுப்பேற்றவுடன் குற்றங்களை தடுக்க சிறப்பாக செயல் ஆற்றுவதுடன்,  மக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து போக்குவதில் முனைப்புடன் செயலாற்றுகிறார். சேலம் மக்களின் முக்கிய பிரச்சனையான போக்குவரத்து நெரிச்சலை குறைக்க தனியார் பஸ் ஓட்டுனர்கள் சங்கம், அரசு போக்குவரத்து கழகங்கள், ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள், மாநகராட்சி அலுவலர்கள், மேம்பால கட்டுமான ஒப்பந்ததாரர்கள் ஆகியோருடன் கலந்தாய்வு நடத்தி போக்குவரத்து பிரச்சனைகளை தடுக்க நடவடிக்கை எடுத்துவருகிறார். அதே போல நிதிகளை கையாளும் நிறுவனங்களான வங்கி, அடகு கடை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றின் அலுவலர்களுடனும் கலந்து பேசி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகிறார். சேலம் மாநகரில் உள்ள தங்கும் விடுதி, கல்யாண மண்டபம் போன்றவைகளின் உரிமையாளர்களுடன் கலந்தாய்வு நடத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறைகளை வழங்கி வருகிறார். இது தவிர அனைத்து கல்லூரிகளிலும் ரேகிங் முறையை தடுக்கும் பொருட்டு கலந்தாய்வு கூட்டம் நடத்தி ரேகிங் முறையை முற்றிலும் தடுத்து வருகிறார்.

     மூத்த குடிமக்களை பாதுகாக்கும் பொருட்டு 70 வயதுக்கு மேற்பட்டோர்களை கண்டறிந்து அவர்களின் குறைகளை போக்கும் பொருட்டு சிறப்பு திட்டங்களை தீட்டிவருகிறார். நவீன மயமான காலத்திற்க்கு ஏற்றார் போல் வாட்ஸ்ஆப் சேவை மூலம் சேலத்தில் நடக்கும் பொது மக்களின் பிரச்சனைகள் குறித்து புகைப்படம், வீடியோ, தட்டச்சு செய்திகளை அனுப்பும் வண்ணம் சிறப்பு HEALP LINE NUMBER வெளியிடவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு தலைக்கவசம் அணியும் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார்.

     சேலம் மாநகரில் குற்றங்களை தடுப்பதுடன் பொதுமக்களின் தேவைகளை அறிந்து அவர்களுடன் இணைந்து பணியாற்ற பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். தான் பணியாற்றிய அனைத்து இடங்களிலும் தனக்கென்று ஒரு இடம்பிடித்து பணியாற்றிய சஞ்சய் குமார் ஐ.பி.எஸ் அவர்கள் சேலம் மாநகர பொதுமக்களின் இதயத்திலும் தனி ஒரு இடம் பிடித்திருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை. காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகத்திற்க்கு இலக்கணமாக பணியாற்றும் இவரை www.oursalem.com மனதார பாராட்டுகிறது.

                                                                                                            சேலம்   எஸ்.ராமச்சந்திரன்

                                நன்றி : குற்றம் குற்றமே – வார இதழ்