எனக்கு தெரிந்தவர்கள் ஆயிரம் பேர் உண்டு.
ஆனால் நண்பர்கள்….
அந்த பட்டியலில் அவனுக்குத்தான் முதலிடம் உண்டு.
போன மாதம் சென்னையில் ஒரு நாள்…
வடபழனி signal -அருகே கொளுத்தும் வெயிலில்
பைக்கை முறுக்கியபடி நிற்கும்போது,
அவன் போனில் அழைத்தான்.’மக்கா 2-ம்தேதி பால் காய்ச்சி வைச்சிருக்கேன்.பத்திரிகை அனுப்பிட்டேன்.நீ கண்டிப்பா வந்தரு..ஷூட்டிங் அது இது-னு காரணம் சொல்லாத…எனக்கு கெட்ட கோவம் வந்துரும் பாத்துக்க.”
ஒரே மூச்சில் சொல்லி முடித்து விட்டான்.
அவன் எப்போதுமே அப்படிதான்.அவன் பேச நினைப்பதை பேசுவானே தவிர,நாம் என்ன சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை பற்றி கவலைப்படமாட்டான்.காரணம் அவன் இன்னமும் கடிகார முட்கள் மெதுவாக வளரும் வறண்ட பகுதியில் இருக்கிறான்.நான் பரபரப்பான இயந்திர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டேன்.
அவன் தீடீர் கட்டளை என்னை கொஞ்சம் எரிச்சல்படுத்தியது.நம்ம சூழ்நிலைய புரிஞ்சிக்காம பேசும் இவனை என்ன செய்வது….
விசாரித்த பிறகுதான் தெரிந்தது அவன் புது வீடு ஒன்றும் கட்டவில்லை.இருக்கிற பழைய வீட்டை அங்கே இங்கே கொத்தி பூசி,அதை புது வீடு என்கிறான். அவசியம் நாம் போக வேண்டுமா? என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன். எப்பவாவது ஊருக்கு போகும் போது,அவன் புது (?) வீட்டுக்கு போனால் போயிற்று.சுண்டைக்காய் கால் பணம்.சுமை கூலி முக்கால் பணம் என்று ஒரு பழமொழி உண்டே,
அதை போல நான் கொடுக்கபோகும்
அன்பளிப்பை விட,மூன்று மடங்கு செலவழித்து ஊருக்கு போய் வருவது முட்டாள்தனம் என்று மனம் சொல்லியது.அதோடு அவன் அழைப்பை மறந்துவிட்டு மீண்டும் இயந்திரமானேன்.
ரெண்டு நாள் கழித்து அம்மா போனில் “பால் காய்ச்சி வீட்டை” நினைவு படுத்தினாள்.”அட போம்மா..அவனுக்கும் வேற வேலையில்லை…உனக்கும் வேற வேலையில்லை…” போனை எரிச்சலில் துண்டித்தேன்.
தனியாக இருக்கும் போது யோசித்தேன்.”ஒரு எட்டு போயிட்டு வந்தாதான் என்ன?”பாவம் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு வீடு கட்டி இருக்கான்.நமக்கிருக்கும் கபடு பாராத நட்பில் ஒருத்தன்.சரி போகலாம் என்று முடிவு எடுத்தேன்,அரைகுறை மனதோடு.
எந்த எற்பாடும் இல்லாமல் ஒரு தீடிர் பயணம்.ஊருக்கு வந்து இறங்கி ஆட்டோவில் என் வீட்டுக்கு போய் கொண்டு இருந்தேன்.அவனது அழைப்பு.”மக்கா கரெக்டா 10 மணிக்கு வந்துரு.நா பிறவு பேசுதேன்”.வைத்துவிட்டான்.எனக்கு முதலில் எரிச்சல் வந்தது.நான் சென்னையில் இருந்து வந்துவிட்டேனோ என்பதை கூட உறுதிபடுத்தாமல்,அவன் பாட்டுக்கு பேசுறான்.சரி..அவனோட communication skill
அவ்வளவுதான் என்று நினைத்து கொண்டேன்.
அவன் சொன்ன மாதிரி கரெக்டா 10 மணிக்கு போய்விட்டேன்.”ஏய் வா மக்கா.எங்க வராம்ம இருந்திருவியோன்னு நினைச்சேன்”.அவன் இந்த இடத்தில பேசிய dialog சரியாய் sink ஆகவில்லை என்று எனக்கு தோன்றியது.
பிறகு வீட்டை சுற்றி காண்பித்தான்.புறா கூண்டை எலி கூண்டாக்கியது போல் இருந்தது அந்த வீடு.என்ன… கொஞ்சம் Tiles போட்டு,வர்ணம் பூசி…ஒரு வழியாக கான்கீரீட் வீட்டுக்கு வந்து விட்டான்.இதுக்கு இம்பூட்டு ஆர்ப்பாட்டம் தேவையில்லைதான்.
2 மணி நேரம் நெளிந்தவாறே உக்காந்து இருந்தேன்.
“நா புறப்படட்டுமா…”என கேட்கும் முன் அவனே
ஆரம்பித்து,”பொறு மக்கா..எங்க அப்பாகிட்ட செத்த நேரம் பேசிக்கிட்டு இரு.என் தங்கச்சி மாப்பிளை உடனே போகனும்காக,அவுகளை பஸ் எத்தி பூட்டு வந்துடுறன்”. சொல்லி விட்டு அவன் மாயமாய் மறைந்தான்.
அவன் அப்பாவிடம் என்ன பேசுவது என நான் யோசித்து கொண்டிருக்கும்போது அவரே ஆரம்பித்துவிட்டார்.
“இந்த வீடு எங்க பூர்விக வீடு கிடையாது,தெரியுமா உங்களுக்கு?.எங்க தாத்தா இடம்.ரொம்ப வருஷம் சும்மாவே கிடந்தது.நாந்தான் ஒரு வைராக்கியதுல்ல இந்த இடத்துல்ல ஒரு வீட்டை கட்டினேன்.
நான் சுதாரித்து கொண்டேன்.”ஆஹா…ஒரு Flash Back ஆரம்பிக்குது.ஒரு வேளை நல்ல story கிடைத்தாலும் கிடைக்கும்” என்று பேச்சை வளர்க்க ஆரம்பித்தேன்
.
என்ன வைராக்கியம்?
அவர் ஒரு பெறுமூச்சுடன் ஆரம்பித்தார்.எனக்கு வேலை வெட்டி ஒண்ணும் உருபடியா இல்லைன்னு ஒருத்தனும் இந்த ஊருல பொண்ணு தர மாட்டேனுட்டான்.சரி அயித்தை பொண்ணை காட்டலாமுனு பார்த்தா அவ என்னடான “குடியிருக்க மொதல்ல ஒரு வீட்டை கட்டு.அதுக்கப்புறம் வந்து என்னை கட்டுனூட்டா.”
அந்தானைக்கு எனக்கு ரோஷம் வந்துட்டு…கடனை உடனை வாங்கி ஒரு வைராக்கியதுல இந்த வீட்டை
கட்டிபுட்டேன். அவ்வளவுதான்.அவர் flash back-ய் முடித்து கொண்டார்.எனக்கு கொட்டாவி வந்தது.
என் அவஸ்தையை அவர் புரிந்துகொண்டார் போலும்.”இப்ப பழைய வீட்டை இடிச்சிட்டு என் மகன் புது வீடு கட்டி இருக்கானே…இதுவும் ஒரு வைராக்கியம்தான்.” ரெண்டாவது flash Back-ஆ ? சலிப்புடன் அவர் முகத்தை பார்த்தேன்.அவர் ஆரம்பித்தார்.
“தம்பிக்கு நினைவு இருக்கானு தெரியல்ல? நீங்க ஏழாவது படிக்கும் போது ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்தீங்க.அப்ப இது குச்சி வீடுதானே.லேசா கைய தூக்குனலே கூரை தட்டும்.அன்னிக்கு நீங்க மறந்தாப்புல கையை தூக்க,பேன்-ல உங்க கை பட்டு பிளடு வெட்டி ஒரே ரத்தம்.அனைக்கு ராத்திரி பூரம் இவன் ஒரே அழுகை.அன்னிக்கு எடுத்த வைராக்கியம்தான்.இனைக்கு பால் காய்ச்சிருக்கான்.இதை உங்கிட்ட சொல்லபடாதுன்னு எனக்கு கண்டிஷன் வேற போட்டிருக்கான்.”
நான் மென்று முழுங்கி வார்த்தையை தேடுவதற்க்குள் அவனே வந்து விட்டான்.”என்ன மக்கா…உன் பொறுமையை சோதிச்சிட்டேனா…ரொம்ப தேங்க்ஸ் மக்கா, நீ வந்ததுக்கு…
யாருக்கு யார் நன்றி சொல்வது…
முகநக நட்பது நட்பன்று.நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு….
நண்பர்கள் தின நினைவாக…
என்றும் அன்புடன்,
ச.முத்தமிழ்.
திருநெல்வேலி
