சென்னை தியாகராயநகரில் தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழா நடந்தது.

இதில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:-

அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி நடந்த போதுதான் சுயமரியாதை திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டன. கலைஞர் தலைமையில் நடந்த தி.மு.க. ஆட்சியில் ஏழை, எளியவர்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

கடந்த 5 ஆண்டுகளாக நடந்த அ.தி.மு.க. ஆட்சி காணொலி காட்சி ஆட்சியாக இருந்தது. இப்போது இந்த ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை.

இன்றைய ஆட்சி முடங்கி கிடக்கிறது. காவிரியில் தண்ணீர் வரவில்லை. இதுபற்றி பிரதமரிடம் முறையிடுவது குறித்து இந்த அ.தி.மு.க. அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.

 அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட முடியாத நிலையில் தமிழக ஆளும் கட்சி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

தி.மு.க. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிய போது சில கட்சிகள் பங்கேற்கவில்லை. கர்நாடக மாநிலத்தில் அனைத்துக் கட்சிகளும் இந்த பிரச்சனையில் ஒற்றுமையாக உள்ளன. ஆனால் தமிழக கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை.

செயல்படாத ஆளுங்கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. எனவே இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

கலைஞர் எனக்கு தந்திருப்பது பதவி அல்ல, பொறுப்பு.  அரசியல் பண்பாட்டுடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம்பெற வேண்டும் என்று முதலில் அறிக்கை வெளியிட்டோம்.

தற்போது பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற முறையில் அரசை விமர்சித்து வருகிறோம். முதல்வர் விரைவில் குணம் அடைந்து மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும். அரசு பொறுப்புடன் செயல்பட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

 நன்றி : மாலைமலா்