பானாஜி : ‘சுதந்திரத்துக்கு பின் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டுமென மகாத்மா காந்தி கண்ட கனவை நனவாக்கும் முயற்சியில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார்’ என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசி உள்ளார். கோவா மாநில பாஜ கட்சியின் தேர்தல் பொறுப்பாளரான நிதின் கட்கரி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டுமென மகாத்மா காந்தி கனவு கண்டார். காங்கிரஸ் இல்லாத பாரதத்தை அவர் விரும்பினார். காந்தி கண்ட அந்த கனவை நனவாக்கும் முயற்சியில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சிலர் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவரவர் தங்கள் பங்களிப்பை அளிக்க போட்டி போடுகின்றனர்.
கோவாவில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைவதிலிருந்து காந்தியின் கனவு நனவாக ஆரம்பிக்கும். இம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி, பாஜவுக்கு சாதகமானது. ஏனெனில், ஆம் ஆத்மி பிரிக்கும் ஓட்டு அனைத்துமே காங்கிரசின் ஓட்டுகளாகத்தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
