
சேலம் : சேலத்தை அடுத்துள்ள நாழிக்கல்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் பச்சியப்பன். இவருடைய மகன் திருநாவுக்கரசு (26). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. இவர் மீது மல்லூர் காவல்நிலையத்தில் ஏற்கனவே கொலை, திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. திருமணத்திற்குப் பிறகு சொந்த ஊரை விட்டு சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணத்தில் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் (டிச. 17) இரவு திருநாவுக்கரசு, நாழிக்கல்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு நண்பர் சரவணன் (19) என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். இரவு 9.30 மணியளவில், அதே பகுதியைச் சேர்ந்த 15 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக தாக்கியது. இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் அங்கேயே நிலைகுலைந்து சரிந்து விழுந்தனர். ஊர் மக்கள் திரண்டு வருவதை அறிந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்ட அப்பகுதியினர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு நள்ளிரவில் உயிரிழந்தார். சரவணனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் தொடர்பாக மல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் கலையரசி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
