சங்ககிரி: புது பஸ் ஸ்டாண்ட், சமுதாயக்கூடம், ஜி.ஹெச்., சாலை உள்ளிட்ட திட்டங்கள் கிடப்பில் உள்ளதால், சங்ககிரி டவுன் பஞ்சாயத்து மக்கள், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சங்ககிரி பேரூராட்சியில் உள்ள, 18 வார்டுகளில், 13 ஆயிரத்து, 437 ஆண்கள், 13 ஆயிரத்து, 793 பெண்கள் உள்பட, 27 ஆயிரத்து, 230 பேர் வசிக்கின்றனர். கடந்த உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., நகர செயலர் செல்லப்பன் வெற்றிபெற்று, சங்ககிரி பேரூராட்சி தலைவரானார். இதில், ஒரு கவுன்சிலர் இறந்ததுபோக, அ.தி.மு.க., 12, தி.மு.க., 4, பா.ம.க., 1, என, 17 கவுன்சிலர்கள் உள்ளனர்.

வருவாய் இழப்பு: லாரி மற்றும் பஸ் தொழில் சார்ந்த பகுதியாக, சங்ககிரி உள்ளதால், போக்குவரத்து அதிகம் காணப்படும். பழைய பஸ் ஸ்டாண்ட் குறுகலாக இருந்ததால், விரிவுபடுத்த வேண்டும் என, சங்ககிரி புது பஸ் ஸ்டாண்ட், 2009 அக்., 26ம் தேதி, 1.5 கோடி ரூபாய் மதிப்பில், 34 கடைகள், நவீன ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என, தனித்தனி கழிப்பறைகள் கட்டப்பட்டு, அப்போதைய தி.மு.க., ஆட்சியில், துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் திறந்துவைத்தார். அந்த பஸ் ஸ்டாண்டுக்குள், இதுவரை பஸ்கள் உள்ளே சென்று வருவதில்லை. இதனால், பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்ட பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டுள்ளதால், பேரூராட்சிக்கு, பல லட்சம் ரூபாய், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், தி.மு.க., ஆட்சிக்காலத்தில், சங்ககிரி சந்தைப்பேட்டை, பத்தாவது வார்டில், 16 லட்சம் ரூபாய் மதிப்பில், சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. ஏழு ஆண்டுகளாகியும், மக்கள் பயன்பாட்டிற்கு விடாமல், அரசின் இலவச பொருட்களான மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்படும், குடோனாக உள்ளது. அதில் உள்ள கதவு, ஜன்னல்கள் உள்ளிட்ட கண்ணாடிகளை, சமூக விரோதிகள் உடைத்து, சேதப்படுத்தி உள்ளனர். சுற்றுச்சுவர் இல்லாமல், பாதுகாப்பற்ற நிலையில், சமுதாயக்கூடம் உள்ளது.

இதுவரை…: பொது கழிப்பிடத்தை திறக்காமல் வைத்துள்ளதால், சமுதாயக்கூடத்தை சுற்றி, திறந்தவெளி கழிப்பிடமாக, மக்கள் பயன்படுத்துகின்றனர். அதை ஒட்டி, சந்தைத்திடல் உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுதவிர, சந்தைப்பேட்டையில் இருந்து, வி.என்.பாளையம் வரை செல்லும், ஜி.ஹெச்., சாலை, ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக உள்ளது. அதை சீரமைக்கக்கோரி, பல்வேறு அமைப்பினர், பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும், இதுவரை நடவடிக்கை இல்லை.

கடந்த தேர்தலில், இலவச மிக்சி, கிரைண்டர் தருவதாக கூறி, பேரூராட்சி தலைவர் வெற்றி பெற்றார். ஆளுங்கட்சியாக இருப்பதால், நிர்வாகம் நல்ல முறையில் இருக்கும் என, எதிர்பார்த்தோம். ஆனால், தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்டை, பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. அதுகுறித்து, பலமுறை மனு கொடுத்தும், தலைவர் கண்டுகொள்ளவில்லை. ஐந்து ஆண்டுகளாக, காலம் கடத்திய தலைவர், உள்ளாட்சி தேர்தல் வருவதால், ஆர்.டி.ஓ.,விடம் புது பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மனு கொடுத்துள்ளது, கேலிக்கூத்தாக உள்ளது.

– என்.மகேந்திரவர்மன், சேலம் மேற்கு மாவட்ட ம.தி.மு.க., செயலர்,

சங்ககிரி டவுன் பஞ்சாயத்து தலைவர், மவுனம் சாதித்தே, காலத்தை கழித்துவிட்டார். சங்ககிரி யில் புதிய பஸ் ஸ்டாண்டிற்குள், பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை. பழைய இடைப்பாடி சாலை, மலையடிவாரம், பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், எந்த வார்டுகளிலும், துப்புரவு மற்றும் சாலை பணிகள், முறையாக நடக்கவில்லை. இது குறித்து, பல போராட்டங்கள் நடத்தியும், மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை. அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதாக, தேர்தல் நேரத்தில் மட்டும் சுட்டிக்காட்டுகிறார்களே தவிர, கொடுக்கும் வாக்குறுதிகளை மறந்து விடுகின்றனர்.

– டி.ஆர்.ரத்தினம், இ.கம்யூ., ஒன்றிய செயலர்,

சங்ககிரி புது பஸ் ஸ்டாண்ட், சமுதாயக்கூடம் உள்ளிட்டவை, தி.மு.க., ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது என்பதற்காகவே, அந்த திட்டத்தை செயல்படுத்தாமல், காலம் கடத்துகின்றனர். ஈஸ்வரன் கோவில் அருகே, ராஜாபாளி குளத்தை தூர்வாராமல் விட்டதால், கழிவுநீர் தேங்கி, கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட, நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டால், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் என, காரணம் சொல்கின்றனர். ஐந்து ஆண்டுகளாக, எந்த செயல்திட்டங்களும் முறையாக செயல்படுத்தவில்லை.

– வி.சங்கரன், தி.மு.க., நகர துணை செயலர்

தலைவராக பொறுப்பேற்ற பின், சங்ககிரி புது பஸ் ஸ்டாண்டிற்குள், பஸ்கள் சென்று வர ஏற்பாடு செய்தேன். ஆனால், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக, இடைப்பாடி, திருச்செங்கோடு பஸ்கள் செல்வதால், புது பஸ் ஸ்டாண்டிற்கு சென்று, மக்கள் பஸ் ஏறுவது இல்லை. இதனால், மீண்டும் பஸ்கள் உள்ளே செல்லாமல், வெளியில் நின்று செல்கிறது. அதற்கு, உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். சமுதாயக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள அரசு பொருட்கள், விரைவில் அகற்றி, மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். மேலும், ஜி.ஹெச்., சாலை, விரைவில் புதுப்பிக்கப்படும். தவிர, ராஜாபாளி குளம் தூர்வாரவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

– ஆர்.செல்லப்பன், தலைவர், சங்ககிரி பேரூராட்சி.