நரசிங்கபுரம்: நரசிங்கபுரம் நகராட்சியில், சுகாதாரத்திற்கான உட்கட்டமைப்பு வசதியில்லாததால், முழு அளவில் சுத்தம் செய்யும் பணி மேற்கொண்டும் பயனில்லை.
சேலம், நரசிங்கபுரம் இரண்டாம் நிலை நகராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. அங்கு, நகராட்சிக்கு சொந்தமான மூன்று கடைகள், நரசிங்கபுரம், விநாயகபுரம் ஆகிய இடங்களில் வாரச்சந்தை, குடிநீர் வரி, 35 லட்சம் ரூபாய், சொத்து, தொழில் வரி, ஒரு கோடி ரூபாய், மத்திய, மாநில நிதிக்குழு மூலம், 3.75 கோடி ரூபாய், நகராட்சிக்கு ஆண்டு வருவாய் கிடைக்கிறது. தினமும், 10 மெட்ரிக் டன் குப்பை, கழிவு சேகரமாகிறது. அவற்றை கொட்ட இடம் இல்லாததால், ஆத்தூர் நகராட்சி கிடங்கில், குப்பையை கொட்டுகின்றனர். 71 துப்புரவு பணியாளர்களுக்கு, 23 பேர் மட்டுமே உள்ளதால், குப்பை அள்ளும் பணி தாமதமாகிறது. குறிப்பாக, ஒன்பதாவது வார்டு, நேதாஜி நகர், செந்தில் நகர், புத்துமாரியம்மன் கோவில் தெரு, சக்தி நகர், தீப்பெட்டி காலனி உள்ளிட்ட குடியிருப்புகளில், 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அங்கு, சாலை, மழை நீர் வடிகால் வசதிகள் இல்லை. இதுகுறித்து, மக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும், ஐந்து ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை. உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த வார்டுக்கு, 1.10 கோடி ரூபாய் உள்பட அனைத்து வார்டுகளுக்கும், மழைநீர் வடிகால், சாலை போன்ற அடிப்படை வசதிகளுக்கு, 3 கோடி ரூபாய்க்கு, 16ம் தேதி ஒப்பந்தம் விட்டும், பணி துவங்கியபாடில்லை. இதனால், அடிப்படை வசதிகளுக்கு, மக்கள் போராடும், அவலநிலை தொடர்கிறது.
நரசிங்கபுரம் நகராட்சியாக உள்ளபோதும், துணை சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது. அரசு மருத்துவமனை, பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் போன்றவை இல்லை. நகர்மன்ற கவுன்சில் கூட்டம் நடத்தவோ, நகர தலைவருக்கு, தனி அறையோ இல்லை. இரண்டாம் நிலை நகராட்சியாக இருந்தபோதும், ரேஷன் கடையில், பேரூராட்சியாக இருந்த அளவுக்குதான், மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மின் தகன மையம் அமைக்க வேண்டும். 6, 7, 8 ஆகிய வார்டுகளில், பொது கழிப்பிட வசதிகள் இல்லை. குப்பை கொட்ட, இடம் தேர்வு பணி, தாமதமாக நடந்து வருகிறது.
– க.வேல், 3வது வார்டு கவுன்சிலர் (த.மா.கா.,),
கடந்த, 1988, அக்., 9ம் தேதி, மாவட்ட கிளை நூலக கட்டடம் திறக்கப்பட்டது. அங்கு, 26 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. தவிர, அனைத்து தினசரி நாளிதழ், வார, மாத இதழ்கள் வருகின்றன. 61 புரவலர்கள், 1,500 உறுப்பினர்கள் உள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஓய்வு ஊழியர்கள், பெண்கள் உட்பட, தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். 28 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நூலக கட்டட மேற்கூரை பெயர்ந்து வருகிறது. கடந்த, 2011-16ல், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், முதல்வர் ஜெயலலிதா, நூலக கட்டடம் புதிதாக கட்ட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தந்தும், அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு கிடைக்காததால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
– பொ.சுப்ரமணியம், ஓய்வு பெற்ற கூட்டுறவு அலுவலர்.
நரசிங்கபுரம் பஸ் ஸ்டாப்பின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளோம். துணை சுகாதார நிலையத்தில், படுக்கை வசதிகளுடன் தரம் உயர்த்தும்படி, தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு சேகரமாகும் குப்பை கொட்ட, ஐந்து ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அரசு நிர்ணய விலைக்கு, போதிய இடம் கிடைக்கவில்லை. புறம்போக்கு நிலம் ஒதுக்க, கலெக்டருக்கு மனு செய்துள்ளோம். மின் தகன மையம் அமைக்கக்கோரி, திட்ட மதிப்பீடு தயார்செய்து, அரசுக்கு கோப்புகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. நூலகத்துக்கு, புது கட்டடம் கட்ட, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் நகல், அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
– மு.காட்டுராஜா, நகராட்சி தலைவர் (அ.தி.மு.க.,)
