வாழப்பாடி:

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ். இவர், தொழிற்சாலைகளில் உயரமான இடங்களில் பணி செய்ய பயன்படுத்தும், 14 சக்கரங்கள் கொண்ட, பழைய ராட்சத கிரேன் வாகனத்தை, நாகாலாந்தில் விலைக்கு வாங்கி, பல்வேறு பகுதிகளுக்கு வாடகைக்கு அனுப்பி வருகிறார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, தனியார் தொழிற்சாலையில் பணி மேற்கொள்ள, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள, ராட்சத கிரேன் வாகனத்தை அனுப்பினார். தஞ்சை பாபநாசத்தை சேர்ந்த டிரைவர் பத்ரிநாத், 40, ஓட்டினார். கிளீனர்களாக, டில்லியைச் சேர்ந்த சமீம் அகமத், 32, பீஹாரை சேர்ந்த ஹேமந்த், 24, இருந்தனர்.
நேற்று அதிகாலை, 12:45 மணிக்கு, சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வாழப்பாடி, கருமாபுரம் அருகே வந்தனர். அப்போது, கிரேனில் திடீரென தீப்பற்றியது. உயிர் தப்ப நினைத்து, சமீம் அகமத், சாலையில் குதிக்க, தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பத்ரிநாத், ஹேமந்த் ஆகியோர், இறங்கி தப்பி ஓடினர்.
வாழப்பாடி தீயணைப்பு வீரர்கள் அதிகாலை, 3:45 மணிக்கு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மூன்று மணி நேரம் போராடியும், 8 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரேன் எரிந்து நாசமானது. ‘ஆயில் கசிவால் தீப்பிடித்திருக்கலாம்’ என, காரிப்பட்டி போலீசார் கூறினர். இச்சம்பவத்தால், சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
