பி.என்.பட்டி: பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்தில், கால்வாய் குறுக்கே பாலம் கட்டப்படாததால், மக்கள், சாக்கடையை கடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது.
மேட்டூர் தாலுகா, பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து மற்றும் வீரக்கல்புதூர் டவுன் பஞ்சாயத்து இடையே பிரதான கழிவுநீர் கால்வாய் ஓடுகிறது. அந்த கால்வாய் கரையோரம், பி.என்.பட்டி, ஒன்றாவது வார்டில், பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்கள், கழிவுநீர் கால்வாயை கடந்தே, சாலைக்கு வர வண்டும். இதனால், கால்வாய் குறுக்கே, நடை பாலம் கட்ட கோரிக்கை விடுத்தனர். பாலம் கட்டாததால், சாக்கடைக்குள் இறங்கியே, மக்கள் சாலைக்கு வருகின்றனர். மழை காலங்களில், கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது மட்டுமின்றி, வீடுகளிலும் புகுந்துவிடும் அவலம் நீடிக்கிறது.
கால்வாய் கரையோரம் வசிக்கும் மூதாட்டி பச்சியம்மாள் கூறியதாவது: நடை மேம்பாலம் கட்டாததால், தினமும் சாக்கடையை கடந்தே, வீதிக்கு வர வேண்டியுள்ளது. மழை காலங்களில், கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என்பதால், குடியிருப்புகளை விட்டு வெளியேற முடியாது. வெளியில் வேலைக்கு சென்றவர்கள், வீட்டுக்கு வரமுடியாது. அப்போது, சாலையோர வீடுகளில் தஞ்சம் அடைந்த சம்பவங்கள் நடந்துள்ளன. சாக்கடை குறுக்கே, பாலம் கட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
